Wednesday 8 August 2012

குற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வி


புதுடில்லி: அசாம் கலவரம் தொடர்பாக லோக்சபாவில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே எதிர்கட்சிகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது: அசாம் கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அனைவரும் இணைந்து செயல்படுவதற்கான நேரம். இந்த கலவரம் எதிர்பாராதது. கலவரம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் ஏற்பட்டவுடன் உடனடியாக ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. ஆனால் முழுமையான தகவல் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

அகதிகள் குறித்த விபரம் உள்ளதா? அத்வானி கேள்வி: உள்துறை அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அசாமில் இனக்கலவரம், மதக்கலவரமோ ஏற்படவில்லை. அசாமில் இருப்பவர்களுக்கும், வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும் இடையே தான் மோதல் ஏற்பட்டது. மத்திய அரசிடம் அகதிகள் குறித்த முழு விபரம் உள்ளதா? அசாம் கலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சரின் விளக்கத்தை ஏற்க முடியாது. அரசின் தோல்வி குறித்து உள்துறை அமைச்சரின் விளக்கம் தேவை என கூறினார்.

இதன் பின்னர் குரல் ஓட்டெடுப்பு மூலம் அசாம் கலவரம் தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானம் தோல்வியடைந்தது.


முன்னதாக அசாம் கலவரம் தொடர்பாக பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிஅசாம் மாநிலத்தில் மக்கள் ‌அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.வங்கதேசத்திலிருந்து ‌சட்டவிரோதமாக பலர் ஊடுருவி வருகின்றனர். இவர்களால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுக்காத இந்த மத்திய அரசு, சட்ட விரோத அரசு என கூறியதையடுத்து, லோக்சபாவில் கடும் சலசலப்பு ஏற்பட்டது. அத்வானியின் இந்த கருத்திற்கு ‌சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பரபரப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து, அத்வானி தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றார். கடும் அமளி நிலவியதால், லோக்சபா மதியம் 2மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பார்லிமென்ட் மழைக்‌கால கூட்டத்‌தொடர், இன்று இரு அவைகளிலும் பெரும் அமளியுடன் துவங்கியுள்ளது. அசாம் வன்முறை, விலைவாசி உயர்வு, வறட்சி நிலவரம் உட்பட பல பிரச்னைகளை சபையில் எழுப்பி, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், அனல் பறக்கும் விவாதங்களுக்கு இந்தக் கூட்டத் தொடரில் பஞ்சமிருக்காது என்ற நிலையில், இன்று காலை பார்லிமென்டின் இரு அவைகளும் துவங்கின.

சுமூக கூட்டத்தொடர் : பிரதமர் நம்பிக்கை : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மன்‌மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்லி., கூட்டத்தொடர் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, மழைக்கால கூட்டத்தொடர் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும். இக்கூட்டத்‌தொடரை, எதிர்க்கட்சிகள் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தொடர் சுமூகமாக நடைபெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும என்றும் அவர் கூறினார்.

அசாம் கலவரம் குறித்து பார்லி.,யில் அறிக்கை - பிரதமர் : இன்று துவங்க உள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டில்லியில், பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, பார்லிமென்ட் கூட்டத்தொடரை, அரசியல் கட்சிகள் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், அது பார்லிமென்ட் விதிமுறைகளுக்குட்பட்டே நடைபெறும் என்றும், பார்லிமென்டில் புதிதாக கால்பதித்துள்ள இளம் எம்.பி.க்‌கள் விவாதங்களில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அசாம் கலவரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர பா.ஜ.கட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவைகள் ஒத்திவைப்பு : பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு அசாம் கலவரம் குறித்து விவாதிக்க எம்.பி.க்கள் கோரினர். இதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டு, கேள்விநேரம் ரத்து செய்யப்பட்டது. பின், அசாம் கலவரம் குறித்த விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சல் எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் மதியம் 12 மணி வரை லோக்சபா ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.ராஜ்யசபாவில், குருத்வாரா துப்பாக்கிச்சூடு குறித்த விவாதம் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதனைய‌டுத்து ராஜ்யசபாவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஹமீது அன்சாரி தெரிவித்தார்.

விவாதத்தை துவக்கினார் அத்வானி : அசாம் கலவரம் குறித்த விவாதம், பார்லிமென்டின் இரு அவைகளிலும் அமளி ஏற்படுத்தியதையடுத்து, நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின் 12 மணிக்கு லோக்சபா மீண்டும் துவங்கியது. அசாம் கலவரம் குறித்த விவாதத்தை, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி துவக்கி வைத்து பேசினார்.

அத்வானி பேச்சு : வங்‌கதேச நாட்டிலிருந்து குடியேறியவர்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, அசாம் கலவரம் குறித்த விவாதத்தில் அத்வானி கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அசாம் மாநில மக்களே அங்கு அகதியாக வாழ்ந்து வருகின்றனர். வன்மு‌றை குறித்து பதில் அளிக்க ‌வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது என்றும், சட்டத்திற்கு விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைப்பு : அசாம் கலவரம் குறித்த அமளி, 12 மணிக்கு பிறகும் ராஜ்யசபாவில் தொடர்ந்து இருந்து வந்ததால், ராஜ்யசபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*News From http://www.dinamalar.com(08-Aug-2012)
http://www.makkalsanthai.com/



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More