Thursday, 6 September 2012

ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் கைகலப்பு


அரசுப் பணியில் உள்ள, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை, நேற்று, ராஜ்ய சபாவில் கடும் அமளிக்கு இடையே, மத்திய அரசு தாக்கல் செய்தது. எம்.பி.,க்களின் கைகலப்பு மற்றும் பெரும் ரகளை காரணமாக இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
அரசு பணியில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க, சட்டத் திருத்த மசோதா கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில், சமாஜ்வாதி கட்சியைத் தவிர, பிற கட்சிகள் அனைத்துமே ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து, இது தொடர்பான மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை இரு தினங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, பார்லிமென்டில் நேற்று, மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நிலக்கரி சுரங்க முறைகேடு ஊழல்கள் காரணமாக, 10 நாட்களாக பார்லிமென்ட் முடங்கியது. இருப்பினும், எந்த சூழ்நிலையிலும், மசோதாவை ராஜ்ய சபாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்து, அரசு தயாராக இருந்தது.

அமளி துவக்கம்:

நேற்று காலை, ராஜ்யசபா துவங்கியதும், அவைத் தலைவர், ஹமீத் அன்சாரி, முன்னாள் ஜனாதிபதி ராதா கிருஷ்ணனை நினைவு கூர்ந்து, ஆசிரியர் தினச் செய்தியை வாசித்து முடித்தார். தொடர்ந்து, "கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும்' என அறிவித்தபோது, சபையில் அமளி ஏற்பட்டது; இதையடுத்து சபை, உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12:00 மணிக்கு மீண்டும் கூடியபோது, தலைவர் நாற்காலியில், குரியன் அமர்ந்திருந்தார். பதவி உயர்வில், இட ஒதுக்கீடு தரும் மசோதாவை அறிமுகப்படுத்தும்படி, குரியன் கேட்டுக் கொண்டார். உடனே, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி எழுந்து, மசோதாவை அறிமுகப்படுத்துவதாகக் கூறி, பேச ஆரம்பித்தார். அப்போது, சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிடக் கிளம்பினர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.,க்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, சமாஜ்வாதி எம்.பி., நரேஷ் அகர்வாலுக்கும், பகுஜன் சமாஜ் எம்.பி., அவதார் சிங்கிற்கும், கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும், ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டனர்.

இதைப் பார்த்து, பிற எம்.பி.,க்கள், அவர்களை விலக்கி விட்டனர். ஐந்து நிமிடங்கள் நடைபெற்ற, இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால், சபையில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் நடந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கும், சபையில் இருந்தார். நிலைமை முற்றுவதை உணர்ந்த குரியன், சபையை, மதியம், 2:00 மணிக்கு ஒத்தி வைத்தார். சபை கூடியதும், மீண்டும் ரகளை ஆரம்பமானது. இதையடுத்து, சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்சபாவில்...:

லோக்சபாவிலும் நேற்று கடும் அமளி காணப்பட்டது. அ.தி.மு.க., - தி.மு.க.,-எம்.பி.,க்கள் வழக்கம் போல, இலங்கை ராணுவத்தினருக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை எதிர்த்து கோஷங்கள் போட்டனர். ராஜபக்ஷே வருகையை எதிர்த்து, திருமாவளவன் கோஷங்கள் போட்டபடி இருந்தார். கேள்வி நேரத்தின்போது, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தி.மு.க., - எம்.பி.,க்கள், கேள்வி நேரம் முடிந்ததும், அமைதியாக அமர்ந்திருந்தனர். திருமாவளவன் தன் முற்றுகையை தொடர்ந்தவுடன், வேறு வழியின்றி, தி.மு.க., - எம்.பி.,க்கள் எழுந்து வந்து, மீண்டும் கோஷங்கள் எழுப்பினர். இவ்வாறு, தொடர்ந்து அமளி இருந்து கொண்டிருந்ததால், இரண்டு சபைகளுமே, மதியத்திற்கு மேல், முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டன.

மாயாவதி அதிருப்தி:

நிலக்கரி ஊழல் விவகாரம், பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதால், அதை முறியடிக்கும் விதமாக, மத்திய அரசு இந்த மசோதாவைக் கையில் எடுத்துள்ளது. தாங்கள் நிறைவேற்ற முன்வந்தாலும், அதை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என, பிரசாரம் செய்வதற்காக, ஆளுங்கட்சி இவ்வாறு நடந்து கொள்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், இந்த விவகாரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கே சாதகமாகும் வகையில், வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவர் தான், இந்த மசோதாவை கொண்டு வருவதில், உறுதியாக இருந்து வந்துள்ளார். காங்கிரசிடம் நெருக்கடி கொடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றும் படியும் கேட்டுக் கொண்டார். பார்லிமென்ட்டிற்கு வெளியே, நேற்று நிருபர்களிடம் பேசிய மாயாவதி, ""இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதில், அரசுக்கு நிஜமான அக்கறை கிடையாது,'' என, கவலை தெரிவித்தார்.

www.dinamalar.com (6 September 2012 )
http://www.makkalsanthai.com/


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More